×

செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நாளை ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம்

நெல்லை, ஜூன் 23: நெல்லை மாவட்டம், ராஜவல்லிபுரத்தில் அமைந்துள்ள பழமையான செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான ஆனித்திருமஞ்சன திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கும் அதிகாலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்று மாலை சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் வீதியுலா நடந்து வருகிறது. 4ம் நாளான கடந்த 19ம் தேதி காலை அழகிய கூத்த பெருமானுக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அன்று மாலை ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளியதும் வீதியுலா நடந்தது. 5ம் திருநாளான 20ம் தேதி மாலை நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கற்பகவிருட்சம் மற்றும் காமதேனு வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

இந்நிலையில் 7ம் திருநாளான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி அழகியகூத்தர் சிம்மவாகனத்தில் தாமிரசபையில் இருந்து விழா மண்டபம் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அழகிய கூத்தருக்கு சிவப்பு சாத்தி சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. 8வது திருவிழாவான இன்று காலை 10 மணிக்கு சுவாமி நடராஜருக்கு வெள்ளை சாத்தி சிறப்பு வழிபாடும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி சிறப்பு வழிபாடும் நடக்கிறது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவம் 9ம் திருநாளான நாளை (24ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு மேல் 12.30க்குள் சுவாமி அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளலும், இதைத்தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும். இதில் நெல்லை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாகப் பங்கேற்கும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் பக்தர்கள் செய்துள்ளனர்.

The post செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நாளை ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Ani Thirumanjana festival ,Kouthar temple ,Sepparai ,Nellai ,Anithirumanjana festival ,Sepparai beautiful Kouthar temple ,Rajavallipuram, Nellai district ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி...